கோவை மாவட்டம், சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட தட்டப்பள்ளம் என்னுமிடத்தில் பவானியாற்றின் நீர்த்தேக்கத்தில் பிடிபட்ட முதலையைக் கொன்று அதன் இறைச்சி மற்றும் தோலைச் சிலர் பதப்படுத்தி வருவதாக சிறுமுகை வனத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர், சிறிய முதலை ஒன்றினை கொன்று அதன் இறைச்சி மற்றும் தோலை தனித்தனியேப் பிரித்து இருவர் கடத்திச் செல்வதைக் கண்டனர்.
உடனடியாக அவர்களைப் பிடிக்க முயன்றபோது, அதில் ஒருவர் தப்பியோடிவிட்டார். பிடிபட்ட மற்றொரு நபரிடம் நடத்திய விசாரணையில், அவரது பெயர் ராஜன் என்கிற பழனிசாமி(50) என்றும் தப்பியோடியவரின் பெயர் மாரியப்பன் என்றும் தெரியவந்தது. மேலும், தாங்கள் மீன்பிடிக்க விரித்த வலையில் குட்டி முதலையொன்று சிக்கிக் கொண்டதாகவும், அதனைக்கொன்று இறைச்சியை உண்டுவிட்டு தோலை விற்கலாம் எனத் திட்டமிட்டதாகவும் பிடிபட்டவர் கூறியதாகத் தெரிகிறது.
இதனையடுத்து ராஜன் என்கிற பழனிசாமியை கைது செய்த சிறுமுகை வனத்துறையினர், அவரிடமிருந்த முதலமையின் உடல் பாகங்களைப் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய மாரியப்பனை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட பவானிசாகர் அணையின் பின்புற நீர்த்தேக்கங்கள் மற்றும் பவானியாற்றின் வனம் சார்ந்த கரையோரங்களில் முதலைகள் காணப்படுவதாகவும் இவற்றை சட்ட விரோதமாக வேட்டையாட முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க: மஸ்து பிடித்த காட்டு யானை - தண்டு வீசிய வனத்துறையினர்!