கோயம்புத்தூரை அடுத்த முத்துகவுண்டன்புதூர் பகுதியில் நந்தகோபால் என்பவருக்குச் சொந்தமான இரண்டு ஆம்னி பேருந்துகள் நீண்ட நாள்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், இன்று (ஜனவரி 29) மதியம் திடீரென இரண்டு பேருந்துகளும் தீப்பிடித்து எரிந்துள்ளன. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாகச் சூலூர் காவல் துறையினர், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
இந்தத் தகவலையடுத்து அங்கு விரைந்துவந்த தீயணைப்புத் துறையினர் பேருந்தில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் ஒரு பேருந்து எரிந்து முற்றிலும் நாசமானது. இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
நீண்ட நாள்களாக ஒரே இடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்ததால் இந்தத் தீ விபத்து ஏற்பட்டு இருக்கக்கூடும் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பேருந்தின் அருகில் மக்கள் யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.