கோயம்புத்தூர் மாவட்டம் சாடிவயல் அடுத்த சிறுவாணி சாலையில் சர்க்கார் போரத்தி கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்துவருகின்றனர். இவர்கள் கூலி வேலை மற்றும் விவசாயத்தை தொழிலாகக் கொண்டுள்ளனர்.
இதற்கிடையில் கடந்த இரு நாள்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியில் சென்ற சர்க்கார் போரத்தி கிராமத்தைச் சேர்ந்த மருதம்மாள், வீட்டிற்குத் திரும்பாததால் அவரை கிராம மக்கள் தேடிவந்தனர். இந்நிலையில், வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் இன்று காலை அவர் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போளுவாம்பட்டி வனத் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், மூதாட்டி காட்டு யானை தாக்கி உயிரிழந்திருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து அவரது சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதேபோல் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம், கோபினாரி பழங்குடி கிராமம் அருகே உள்ள கொடுங்கரைப்பள்ளம் ஆகிய பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களை ஒற்றை ஆண் யானை தள்ளியதாகத் தெரிகிறது.
இதில் கோவை ஆலாந்துறையைச் சார்ந்த சக்திவேல் என்பவருக்கு கால் மற்றும் இடுப்பில் முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோட்டத்துறையிலுள்ள அரசு பழங்குடி சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.
இதையும் படிங்க: கிணற்றில் விழுந்த காட்டு யானை: மீட்கும் பணியில் வனத் துறை