நேற்றிரவு (நவ.21) இரண்டு காட்டு யானைகள் தொண்டாமுத்தூர் அடுத்த குப்பேபாளையம் கிராமத்துக்குள் புகுந்தன. இவற்றை விரட்டும் பணியில் இன்று (நவ.22) அதிகாலை 6 மணி அளவில் காவல் துறையினர் ஈடுபட்டனர். இதில் இருயானைகளும் பிரிந்து வெவ்வேறு திசைகளில் சென்றன.
அந்த சமயம் அதே பகுதியைச் சேர்ந்த பாப்பாத்தி என்ற மூதாட்டி இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்றார். திடீரென எதிரே வந்த ஆண் யானை ஒன்று அவரைத் தாக்கியது. சம்பவ இடத்திலேயே மூதாட்டி பாப்பாத்தி உயிரிழந்தார்.
யானை, வனப்பகுதிக்குச் செல்லும் வழியில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ராணியம்மாள் என்ற மூதாட்டியும் ஆண் யானையால் தாக்குதலுக்குள்ளாகினார். இதில் மூதாட்டி படுகாயமடைந்தார். அவருடைய அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் யானையை பட்டாசு வெடித்து திசைத் திருப்பினர்.
இது தொடர்பாக போளுவாம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த போளுவாம்பட்டி வனத் துறையினரும், தொண்டாமுத்தூர் காவல் துறையினரும் மூதாட்டி பாப்பம்மாள் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயம் அடைந்த ராணியம்மாள் என்ற மூதாட்டியை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில்,”கடந்த சில நாட்களாக மலையடிவார கிராமங்களில் யானை நடமாட்டம் அதிகரித்துள்ளது. வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டாலும் யானையின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியே வரும்போதே மீண்டும் வனப்பகுதிக்குள் திருப்பி அனுப்ப வேண்டும்” என வலியுறுத்தினர்.
இதையும் படிங்க:தேசிய நெடுஞ்சாலையில் நடந்த பரபரப்பான சேஸிங்...திருடனை மடக்கி பிடித்த காவலர்கள்!