கோயம்புத்தூர்: ஆனைமலை அருகே உள்ள திவான்சாபுதூர் கிராமத்தைச் சேர்ந்த முதியவர், அப்துல் ஜப்பார். 92 வயதான இவர், தனது கிராமத்தில் உள்ள இஸ்லாமிய குடும்பங்களுடன் விவசாயம் செய்து வந்துள்ளார். மேலும், இவர் அப்பகுதியில் உள்ள திவான்சா பள்ளிவாசலின் தலைவராகவும் இருந்துள்ளார். இவருக்கு அப்துல் முத்தலீப், சாஹீல் அமீது, முகமதுகனி என 3 மகன்களும், மைதின்பீவி என்ற மகளும் உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு இவரது மனைவி இறந்ததாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, முதியவருக்குச் சொந்தமான வீட்டை, அவரது 3 மகன்களும் ஏமாற்றி வாங்கியதாகக் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது, "கடந்த 7 மாதத்திற்கு முன்பு எனது 3 மகன்களும் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு என்னை அழைத்துச் சென்றனர். அங்கு எனக்குச் சொந்தமான வீட்டை ஏமாற்றி எழுதி வாங்கிக் கொண்டார்கள். ஏன், எதற்கு என்று கூட என்னைப் பேசவிடாமல் திருப்பி கூட்டிவந்து விட்டனர். அதனைத் தொடர்ந்து, சில நாட்களுக்குப் பிறகு என்னை அந்த வீட்டில் இருந்து வெளியேற்றி விட்டனர்.
இதனிடையே இந்த விபரம் அறிந்த எனது மகள், என்னைத் தேடி வந்து அழைத்துச் சென்றார். அப்போது எனது மகளிடம் வீட்டையும், எனது மனைவி நகைகளையும் ஏமாற்றி வாங்கிவிட்டு தன்னை அனாதையாக விட்டுவிட்டதாக புலம்பினேன். பின்னர் எனது மகளின் உதவியுடன் பொள்ளாச்சி சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று, எனது மகன்கள் என்னை ஏமாற்றி வீட்டை வாங்கியதாகவும், ஆகையால் அதனைத் திருப்பி மாற்றித் தருமாறும் கோரிக்கை மனுவை அளித்தேன்.
ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது தனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. ஆகையால், என்னிடமிருந்து எனது மகன்கள் ஏமாற்றி வாங்கிய என்னுடைய வீட்டை மீட்டுத் தருமாறு கோவை மாவட்ட ஆட்சியரிடமும், தமிழ்நாடு முதலமைச்சருக்கும் கோரிக்கை வைத்துள்ளேன்” என தெரிவித்தார்.