கரோனா தொற்று காரணமாக, குடிபெயர்ந்த தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊருக்கு வாகனங்கள் மூலமாகவும், நடந்தும் செல்கின்றனர்.
இந்நிலையில் கோவை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றிய ஒடிசாவை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று(ஜூன் 4) பல்வேறு வாகனங்கள் மூலம் சேலம் வந்தடைந்தனர். பின்னர் அனைவரும் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.
இவர்கள் அனைவரையும் சேலம் காவல் துறையினர் தடுத்து நிறுத்தி அரசு தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்றனர். மேலும், இரண்டு நாள்களில் ஒடிசா செல்ல மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் அவர்களிடம் உறுதி தெரிவித்தனர்.
திடீரென ஒடிசா மாநில தொழிலாளர்கள் திரண்டு வந்ததால், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.