கோவை: மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனையொட்டிய வனப்பகுதிகளில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் வெள்ளலூர் - சிங்காநல்லூர் சாலையில் உள்ள தற்காலிக தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் அச்சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தரைப்பாலத்தை வாகன ஓட்டிகள் கடந்து செல்ல வேண்டாம் என்று காவல் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
இதேபோல வெள்ளலூர் - நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள தரைப்பாலம் நொய்யல் ஆற்று வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்த தரைப்பாலங்களுக்கு மேலே வெள்ளம் பாய்ந்தோடும் நிலையில், வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் பாலத்தை கடந்து செல்கின்றனர். நகருக்குள் செல்வதற்கு 10 கி.மீ தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளதால் ஆபத்தை உணராமல் பாலத்தை கடப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பில்லூர் அணை மீண்டும் நிரம்பியது... பவானியில் வெள்ளப்பெருக்கு...