கோயம்புத்தூர்: சிங்காநல்லூர் ஹோப் கல்லூரி அருகே ராமானுஜர் நகர் பகுதியில் மாலை நேரங்களில் சாலையோரம் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் பேல் பூரி, பானிபூரி விற்பனை செய்து வருகின்றனர். அப்பகுதியில் கடை வைப்பதில் அவர்களுக்குள்ளே அடிக்கடி தகராறு நிகழ்வதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று (செப். 4) கடை போடுவதில் வடமாநில இளைஞர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாகி உள்ளது. இதில் ஒரு தரப்பினர் கத்தியை கொண்டு மற்றொரு தரப்பினரை தாக்கியதாக தெரிகிறது. இந்த கத்திக் குத்து சம்பவத்தில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சத்திரசால் (வயது 21) மற்றும் உதாசிங் (வயது 41) ஆகிய இருவவருக்கும் படுகாயங்கள் ஏற்பட்டுள்ளன.
இதையும் படிங்க: முடிவுக்கு வந்தததா பல்லடம் 4 பேர் படுகொலை விவகாரம்? - போலீசார் பாதுகாப்புடன் உடல்கள் நல்லடக்கம்!
இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் கத்தியால் சண்டையிட்ட ஒரு தரப்பினர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து சிங்காநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பி சென்றவர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
இதையும் படிங்க: பெண் காவலருக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் தொந்தரவு - காவலர் மீது வழக்குப் பதிவு!