கோயம்புத்தூர்: கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் காரணமாக இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவாமல் இருப்பதற்கு தமிழக கேரள எல்லைப் பகுதியில் சுகாதாரத் துறையினர் மருத்துவக் குழு அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி அருகே உள்ள தமிழக கேரளா எல்லை பகுதியான மீனாட்சிபுரம், கோபாலபுரம், நடுப்புணி, செம்மணாம்பதி உள்ளிட்ட 11 வழித்தடங்களில் உள்ள சோதனைச் சாவடி பகுதிகளில் மருத்துவக் குழுவினர் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி கிருமிநாசினி அடித்து வருகின்றனர். மேலும் வாகனங்களில் வருபவர்களுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருக்கிறதா என பரிசோதனை செய்து பின்னர் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், பொள்ளாச்சி மற்றும் வால்பாறையில் பல்வேறு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொள்ளாச்சி அருகே உள்ள தமிழக-கேரளா எல்லையான மீனாட்சிபுரம் சோதனைச் சாவடியில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவக் குழுவின் கண்காணிப்புகளை ஆய்வு மேற்கொண்டார்.
இதையும் படிங்க: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான 4 பேரும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவர் - மத்திய அரசு!
அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியம், “கேரளாவில் வாளையார் மற்றும் மலபுரம் பகுதியில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. அம்மாநில அரசு சிறப்பாக செயல்பட்டு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இருப்பினும் நிபா வைரஸ் மற்ற மாநிலங்களில் பரவாமல் இருப்பதற்காக, மத்திய அரசு விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும், தமிழக முதல்வர் அறிவுறுத்தலின்படியும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், கேரள - தமிழக எல்லைப் பகுதிகள் அனைத்திலும் பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் முகாமிட்டு, கேரளாவிலிருந்து வருபவர்களை கண்காணித்து அவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என பரிசோதனை செய்து தமிழகத்துக்குள் அனுமதிக்கின்றனா். மேலும், காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டுகளில் அனுமதித்து உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தை பொறுத்தவரை டெங்கு பாதிப்பு பெரிய அளவில் இல்லை. தொடர்ந்து டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளில் டெங்கு பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
மேலும், இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி, பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா, கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: "ஈபிஎஸ் பினாமி உள்ளிட்டோரின் பெயர்களையும் கூறியுள்ளேன்” - கோடநாடு வழக்கில் கனகராஜின் சகோதரர் பரபரப்பு பேட்டி!