தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக பல்வேறு இடங்களில் மது விற்பனை நடைபெறுவதாக எழுந்த புகாரின் பேரில் காவல் துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தீவிர சோதனை மேற்கொண்ட காவல் துறையினர், மது விற்பனையில் ஈடுபட்ட ஐந்து பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்த 450 மதுபாட்டில்கள், மூன்று வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
அன்னூர் பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, நான்கு பேர் இருசக்கர வாகனத்தில் சில பெட்டிகளை ஏற்றுக்கொண்டு இருந்துள்ளனர்.
அவர்களிடம் காவல் துறையினர் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால், சந்தேகமடைந்த காவல் துறையினர், அந்த பெட்டிகளை சோதனை செய்தனர்.
அதில் சிறிய அளவிலான மதுபாட்டில்கள் (90 ml) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, நான்கு பேரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து ஆயிரத்து 536 மதுபாட்டில்கள், மூன்று இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.