கோவை: உக்கடம் கோட்டைமேடு பகுதியிலுள்ள சங்கமேஸ்வரர் கோயில் முன்பு, கடந்த அக். 23ஆம் தேதி காரில் இருந்த சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில் இதுகுறித்த விசாரணையை, என்.ஐ.ஏ. அலுவலர்கள் தொடங்கியுள்ளனர். இந்த வழக்குத் தொடர்பான முழு ஆவணங்கள் அனைத்தும் என்.ஐ.ஏ. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து இந்த சம்பவம் நடைபெற்ற கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் முன்பு இன்று (அக்.30) என்.ஐ.ஏ. எஸ்.பி. ஸ்ரீஜித் தலைமையிலான அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
அவருடன் இந்த வழக்கின் விசாரணை அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள என்.ஐ.ஏ காவல் ஆய்வாளர் விக்னேஷ் மற்றும் இவ்வழக்கில் என்.ஐ.ஏ அலுவலர்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் கோவை மாநகர தனிப்படை போலீசாரும் உடன் இருந்தனர். எஸ்பி ஸ்ரீஜித், இந்த கார் வெடிப்பு சம்பந்தம் தொடர்பாக புகார் அளித்த கோயில் பூசாரி சுந்தரேசனிடம் விவரங்களைக்கேட்டறிந்தார்.
முன்னதாக என்.ஐ.ஏ அலுவலர்கள் ஆய்வு செய்ய வருவதையொட்டி, கோயில் பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மேலும், இந்த ஆய்வைத்தொடர்ந்து சங்கமேஸ்வரர் கோயில் முன்பு வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் அருகில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர்.
இதையும் படிங்க: கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம்...உயிரிழந்த ஜமேஷா முபின் குறித்த புதிய தகவல்