கோவை மாவட்டம் மதுக்கரையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள தாலுகா நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் திறந்துவைத்தார். இந்த நீதிமன்ற திறப்பு விழாவில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாவட்ட ஆட்சியர் ராசாமணி மற்றும் கோவை நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்றனர். நீதிமன்றக் கட்டடத்தை திறந்துவைத்த பின்னர் நீதிபதிகளும், அமைச்சரும் நீதிமன்றத்தை பார்வையிட்டனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ”மாநிலத்தில் மொத்தம் 1140 நீதிமன்றங்கள் இயங்கிவருகின்றன. நடப்பு பட்ஜெட்டில் நீதித் துறைக்காக 1,265 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றங்களுக்கான புதிய கட்டடம், நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் கட்டப்பட்டுவருகிறது. பணியின்போது உயிரிழக்கும் வழக்கறிஞர்களின் சேமநல நிதியும் உயர்த்தப்பட்டிருக்கிறது. அனைத்து வட்டங்கள்தோறும் நீதிமன்றம் அமைக்கப்படும்” என்றார்.