கோயம்புத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டியைச் சேர்ந்தவர் மனோஜ். இவர் பீளமேடு நேஷனல் மாடல் பள்ளியில் 12ஆம் வகுப்பு முடித்திருந்தார். நீட் தேர்வு எழுதி முடித்த நிலையில், கடந்த அக்டோபர் 11ஆம் தேதி ஓஎம்ஆர் சீட்டில் வெளியான முடிவுகளை பார்த்ததில் 594 மதிப்பெண்கள் என காட்டியது. பின்னர் கடந்த 15ஆம் தேதி மீண்டும் ஒரு முறை மனோஜ் ஓஎம்ஆர் சீட்டை பார்த்த போதும் 594 மதிப்பெண் காட்டியது.
ஆனால் நேற்று (அக்டோபர் 16) தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், ஓஎம்ஆர் சீட்டில் 248 மதிப்பெண் என காட்டியதால் மனோஜ் அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து, ஓஎம்ஆர் சீட்டை ஆய்வு செய்தபோது பழைய ஓஎம்ஆர் சீட்டின் முடிவுகளுக்கும், நேற்று வந்த முடிவுகளுக்கும் வித்தியாசம் இருப்பதை கண்டறிந்தார். இதுகுறித்து புகார் தெரிவிக்க என்டிஏ (Nta) என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்புகொண்டாலும் முறையான பதில் இல்லை.
இதுவரை 5 முறை மெயில் மூலம் புகார் தெரிவித்திருப்பதாகவும் மாணவர் மனோஜ் தெரிவித்தார். தன்னுடைய நீட் ஓஎம்ஆர் சீட்டில் குளறுபடி செய்து பேப்பரை மாற்றியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக மாணவரின் தந்தை சுந்தர் ராஜ் கூறுகையில், "நீட் ஓஎம்ஆர் சீட்டில் நல்ல மதிப்பெண் வந்திருந்தும், தேர்வு முடிவில் மதிப்பெண் மிகவும் குறைந்துள்ளதால் குடும்பத்தில் உள்ள அனைவரும் வேதனையடைந்துள்ளோம். இதிலுள்ள குளறுபடிகளை களைய வேண்டும். அப்போதுதான் பாதிக்கப்பட்ட மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற முடியும்" என கோரிக்கை விடுத்தார்.
முன்னதாக, அரியலூர் மாவட்ட மாணவி மஞ்சுவிற்கு ஓஎம்ஆர் சீட்டில் குளறுபடி இருப்பதாக குற்றஞ்சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஓபிசி இட ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு பெற்றே தீரும் - அமைச்சர் விஜயபாஸ்கர்