கோவை போத்தனூர் பகுதியில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படை நாய்கள் பயிற்சி மையத்தில், தேசிய அளவிலான போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. ரயில்வே துறையில் பயன்படுத்தும் நாய்களுக்கு இடையேயான இப்போட்டிகளில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நாய்கள் பங்கேற்றுள்ளன. தென்னக ரயில்வே துறை சார்பில் நடத்தப்படும் இந்த போட்டிகள் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
இதில் ஜெர்மன் ஷெப்பர்ட், லேப்ராடர் ரெட்ரீவர், டாபர்மேன் ஆகிய 3 வகைகளைச் சேர்ந்த 41 நாய்கள் பங்கேற்றுள்ளன. மோப்பத் திறன், கட்டளைகளுக்கு கீழ்படிதல், ஒழுக்கமாக செயல்படுதல், பொருட்களை தேடி எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இப்போட்டிகளில் இருந்து சிறந்த நாய்கள் அகில இந்திய அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.
போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்க இந்த நாய்களை பயன்படுத்த உள்ளதாகவும், அதற்காக போத்தனூரில் 60 அறைகள் கொண்ட நாய்கள் தங்குமிடம் இந்தாண்டு இறுதிக்குள் உருவாக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுமெனவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், ரயில்வே துறையில் பெல்ஜியன் மெலினாய்ஸ் வகை நாய்கள் விரைவில் இணைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.