கோயம்புத்தூர்: அன்னூர் அரசு பேருந்து பணிமனையில் இருந்து 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாகக் காடுவெட்டி பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட நல்ல கவுண்டன்பாளையம் கிராமத்துக்குத் தடம் எண் 6 என்ற பேருந்து இயக்கப்படுகிறது.
இதில் கிராமத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் சென்று வந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இப்பேருந்தின் நேரத்தை அன்னூர் பணிமனை நிர்வாகம் மாற்றி அமைத்துள்ளது. இதனால் கடும் சிரமத்துக்கு உள்ளான கிராம மக்கள், பேருந்தின் நேரத்தை மாற்றி அமைக்கக் கோரி பணிமனை நிர்வாகத்துக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால், அலுவலர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் கிராம மக்கள் தங்களது குழந்தைகளுடன், இன்று (டிச.28) காலை அரசு பேருந்தை சிறை பிடித்தனர். இதனையடுத்த 3 மணி நேரத்துக்குப் பிறகு பணிமனை நிர்வாக அலுவலர்கள் மற்றும் கருமத்தம்பட்டி காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உரிய நேரத்தில் பேருந்து இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனைத்தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: டேங்கர் லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து