கோயம்புத்தூரில் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யக் கோரியும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை கண்டிக்கக் கோரியும் அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் சார்பாக கண்டனப் பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரணியானது உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கி, அரசு கலைக்கல்லூரி வழியாகச் சென்று தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது. இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தப் பேரணியில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறு, வேண்டாம் வேண்டாம் சிஏஏ, ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வைத் தடுத்து நிறுத்து போன்ற வாசகங்கள் அடங்கிய பல்வேறு பதாகைகளை கையில் ஏந்தியவாறு மக்கள் கலந்துகொண்டனர்.
பேரணியில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர், சிறப்பு படை காவல் துறையினர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். இந்தப் பேரணியானது முடியும் வரை அந்த சாலைகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.
இதையும் படிங்க: குடியுரிமை சட்டதிற்கு எதிராக கையெழுத்து இயக்கம்