கோவை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், கோவையில் இன்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், "மக்கள் நீதி மய்யம் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை தற்காலிகமாக பிரச்சினைகளை சரி செய்வது போல் இல்லாமல், தொலைநோக்குடன் உருவாக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் உள்ள திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் வளமான தமிழ்நாட்டை உருவாக்க முடியும்.
வாஷிங் மெஷின் இலவசம் என்ற அறிவிப்பு மக்கள் மீது உள்ள கடன் சுமையை அதிகமாக்கும் முயற்சி. ஆனால், மநீமவிடம் தமிழ்நாட்டின் கடனை அடைத்து, லாபகரமாக அரசு தொழில்களை நடத்தும் திட்டங்கள் உள்ளன. குறிப்பாக, போக்குவரத்து துறையில் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு தற்போது வரை ஓய்வு ஊதியம் முறையாக வழங்கப்படவில்லை. அந்த வகையில் ஊழியர்களை பங்குதாரர்களாக இணைக்கும் போது அவர்களின் வருமானமும் உறுதி செய்யப்படும். அரசுக்கு சுமையும் இருக்காது.
'மக்கள் கேண்டீன்' என்ற திட்டத்தை தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளோம். அதை, அம்மா உணவகம் மற்றும் ரேஷன் கடைகளுடன் ஒப்பிடக்கூடாது. நல்ல விலையில் மக்களுக்கு பொருள்களை கொண்டு சேர்ப்பதே இந்த மக்கள் கேண்டீன் திட்டம். அப்துல் கலாமின் திட்டமான புரா திட்டத்தின் மூலம் அனைத்து கிராமங்களையும் தற்சார்பு கிராமங்களாக உருவாக்கும் திட்டம் இடம் பெற்றுள்ளது.
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கென ஒரு அமைப்பு உருவாக்குவது, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மூலப் பொருள்களை அரசே உருவாக்கி தருவது, நீட் நுழைவுத்தேர்வுக்கு பதிலாக மாநில நுழைவு தேர்வை அமல் படுத்துவது போன்ற பல்வேறு திட்டங்கள் இந்த தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது" எனத் தெரிவித்தார்.
பின்னர் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் குறித்து விளக்கிய துணைத்தலைவர் பொன்ராஜ், "வரியை மட்டுமே நம்பி கடன் வாங்கி ஆட்சி செய்யும் நிலையை மாற்றும் வகையில் இந்தத் தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கான 5 லட்சத்து 60 ஆயிரம் கோடி கடனை அடைத்து 50 லட்சம் முதல் ஒரு கோடி நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.
வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு இலவசங்களாக எதுவும் வழங்காமல், அவர்களின் வாழ்க்கையை செழுமையாக்க உரிய திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன. தனிநபர் மாத வருமானத்தை 60 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்த திட்டங்கள் உள்ளன" என்றார்.
தொடர்ந்து மக்கள் நீதி மய்ய பொருலாளர் இல்லத்தில் வருமான வரி சோதனை செய்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த கமல்ஹாசன், "மக்கள் நீதி மய்யம் கட்சியன் பொருளாளர் தனி மனிதரும் கூட, எங்கள் கட்சியில் எந்தத் தவறும் கிடையாது. மத்திய அரசு கட்சியில் இருப்பவர்களை தவிர அனைவரின் வீடுகளிலும் சோதனை நடத்துகிறது. சோதனை என்னவென்று பார்க்கலாம். இது தேர்தல் அழுத்தமாகவும் இருக்கலாம்.
வருமான வரி செலுத்த வில்லை என்றால் அது தனிநபர் விவகாரம். வருமான வரி செலுத்தாமல் இருப்பது உறுதியானால் கட்சியில் இருந்து அவர் நடவடிக்கை எடுப்போம். ஊடகங்கள் அழுத்தம் காரணமாக எதுவும் செய்ய முடியாது. சட்டம் தன் வேலையை செய்யும். தமிழ்நாட்டின் அமைச்சர்கள் ஊழல்வாதிகள். இங்கு எந்தத் திட்டங்களும் முழுமையடைவில்லை. அதில் ஊழல் நடந்துள்ளது. மக்களின் பணத்தை சூரையாடுதல் நடந்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கு தேர்வே இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் அதற்கு எடப்பாடிதான் சரி" என்றார்.
பத்திரிகையாளர் சந்திப்புக்கு பிறகு கோவையை சேர்ந்த நேயா என்ற ஐந்து வயது சிறுமி சிட்டுக்குருவி தினத்தையொட்டி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கமல்ஹாசனை சந்தித்து சிட்டுக்குருவிகளுக்கான சிறிய வீட்டை பரிசாக வழங்கினார்.