கோவை அரசு மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சைப் பிரிவுக்கு 27 கோடி ரூபாய் செலவில் புதிய புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை கருவி வழங்கப்பட்டுள்ளது. அதனைச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் இன்று நேரில் சென்று, பார்வையிட்டு புற்றுநோய் பிரிவை ஆய்வு செய்தார். அவருடன் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விஜய பாஸ்கர், "கோவை அரசு மருத்துவமனை சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. கோவை அரசு மருத்துவமனைக்குப் பல்வேறு உபகரணங்களை அரசு வழங்கியுள்ளது. உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியின் கோரிக்கையை ஏற்று 27 கோடி ரூபாய் செலவில் புதிய புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை கருவி வழங்கப்பட்டுள்ளது.
கோவையில் தொற்றுக்கு சிறப்பான மருத்துவ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. மாவட்டம் முழுவதும் கரோனாவால் பாதித்த 1,609 பேர் குணமடைந்துள்ளனர். 806 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 2 லட்சத்து 69 பேருக்குப் பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது மாநகர் முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுவருகின்றன. கோவையில் கரோனா நோயாளிகளுக்காக 4,650 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கோவையிலும் பிளாஸ்மா சிகிச்சை அளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அதுமட்டுமின்றி நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சித்த மருத்துவம் சிறப்பான பங்களிப்பை அளிக்கிறது.
கரோனாதான் எதிரி; நோயாளிகள் அல்ல. கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணம், உயிரிழந்தவர்கள் அனைவரும் ஏற்கனவே இதய நோய்களால் பாதிக்கப்பட்டிருந்ததால்தான்" என்றார்.
இதையும் படிங்க: 'பொதுமக்கள் அனைவருக்கும் எலிசா பரிசோதனை செய்யப்படும்' - அமைச்சர் காமராஜ்!