கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வங்கி கடன் தொகை சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜாமணி, மாநகராட்சி ஆணையர் ஷர்வன்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் வேலுமணி, “கரோனா காலத்தில் பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு அறிவித்துள்ள வங்கி கடன் திட்டங்களை அனைத்து தொழில் நிறுவனங்களும் பெறும் வகையில் வங்கிகள் செயல்பட வேண்டும், வங்கிக் கடன் வசதியை அனைத்து தொழில் முனைவோர்களும் பெறும்படி வங்கிகளில் எளிதாக்க வேண்டும். இதற்காக பிரத்யேகமாக ஒரு இணைய சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாவட்ட முன்னோடி வங்கியின் மூலம் கரோனா காலத்தில் குறைந்த கால சிறப்பு நிதியாக சிறப்பு கடன் உதவியாக 8,254 தொழில் நிறுவனங்களுக்கு 554 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, 397 குறு தொழில் நிறுவனங்களுக்கு 12 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, தொழில் துறையினர் மற்றும் வங்கியாளர்கள் அனைவரும் தெரிவிக்கக் கூடிய அனைத்து கருத்துகளையும் நிதி அமைச்சரிடம் எடுத்துச் சென்று உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.