கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமின் முதல் நிலை கலந்தாய்வுக் கூட்டத்தில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சி.வி. கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு மழை பாதிப்பு இடங்களை கணக்கிட்டு சீராய்வு பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறினார். கோவையில் தண்ணீர் தேங்காதாவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார். தண்ணீர் தேங்கக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டு, மின் மோட்டார்கள் உள்ளிட்ட சாதனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த 5 ஆண்டுகளில் சரிவர சாலை வசதி ஏற்படுத்தித் தராத பகுதிகளில் 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு சாலை சீரமைப்பு பணிகள் நடைபெறுவதாக கூறினார். வெள்ள தடுப்பு பணிகளுக்காக கூடுதலாக 11 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இதையும் படிங்க: 'மழையால் தவிக்கும் மக்களின் கண்ணீர் துடைப்போம்' - இபிஎஸ் அறிக்கை!