கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கரோனா தொற்று பரவுதலைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. பிரதமர் அறிவித்தபடி 21 நாள்கள் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.
அரசின் நடவடிக்கைகளுக்குப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். கரோனா தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறையினர், உள்ளாட்சித் துறையினர் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கோவை மாவட்டத்தில் 314 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 546 பயணிகள் சோதனையிடப்பட்டு அவர்களுக்கு கரோனா பாதிப்பு இல்லை என உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஆறு மருத்துவக் குழுக்கள் கொண்டு கோவை விமான நிலையத்தில் பயணிகள் சோதிக்கப்பட்டுள்ளனர். ஏர் ஏசியா விமானத்தில் வரும் பயணிகளைத் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கும் வகையில், 200 தனி இருக்கை வசதியுடன் தனி இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வென்ட்டிலேட்டர்கள் கூடுதலாக ஆர்டர் செய்யப்படுள்ளன. கரோனா தொற்று அறிகுறி உள்ள மக்களை காவல் துறையினர், சுகாதாரத் துறையினர் தொடர்ந்து கண்காணித்துவருகின்றனர். பேருந்துகள் அனைத்தும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டுவருகிறது. முகக் கவசங்கள் நியாயமான விலையில் விற்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டுவருகிறார். இந்தியாவைவிட மருத்துவத் துறையில் சிறந்து விளங்கும் நாடுகளைக் காட்டிலும் தமிழ்நாட்டில் கரோனா தடுப்பு நடவடிக்கை சிறப்பாக செயல்படுத்தப்பட்டுவருகிறது.
கரோனாவை கட்டுப்படுத்த கண்டிப்பாக சுய கட்டுப்பாடு தேவை. வைட்டமின் சி உணவுகளை அதிகளவில் உட்கொள்ள வேண்டும். வைட்டமின் சி உணவுகளை உட்கொள்ள வேண்டி நோட்டீஸ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கரோனா தொற்று குறித்த நடவடிக்கைகளைப் பத்திரிகை துறையினர் மக்களிடம் முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது தலையாய கடமை. வைட்டமின் சி உணவு வகைகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.
நெல்லிக்காய், ஆரஞ்சு போன்றவற்றை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். நியாயவிலைக் கடைகள் மூலம் பொருள்கள் அனைத்தும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிக விலைகளில் பொருள்களை விற்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் எட்டாவது கரோனா கண்டறியும் மையம்!