கோவை : அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 14 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட உணர்திறன் சிகிச்சை பூங்காவை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு , வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் திறந்துவைத்தனர். பின்னர், அங்கு அமைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான பூங்கா மற்றும் சிகிச்சை மையங்களை பார்வையிட்டனர்.
அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு , “பல்வேறு பெரிய பெரிய கட்டிட திறப்பு விழாவை காட்டிலும் இது போன்ற நிகழ்வுகள்தான் தங்களைப் போன்றவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களை தேடி மருத்துவம்
முன்னொரு காலத்தில் பணம் இருப்பவர்கள் தனியார் மருத்துவமனைகளிலும், நடுத்தர மக்கள், பண வசதி குறைந்தவர்கள் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறும் நிலை என்பது இறந்தது. அந்த நிலையை பத்து வருடங்களுக்கு முன்பு கலைஞர் தலைமையிலான அரசு மாற்றி கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அனைவரும் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறலாம் என்ற நிலையை கொண்டு வந்தது.
தற்பொழுதும், அதேபோன்று முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக செயலாற்றி வருகிறது. மக்கள் மருத்துவரை தேடி செல்லும் நிலை மாறி மருத்துவர்கள் மக்களைத் தேடி செல்லும் விதமாக மக்களை தேடி மருத்துவம் என்ற சிறப்பான திட்டம் செயல்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், காது கேளாதோர்களுக்கு கருவிகளை அமைச்சர் வழங்கினார். பின்னர், உணர்திறன் குறைபாடுள்ள குழந்தைகள் திருக்குறள் வாசிப்பது போன்ற கலை நிகழ்ச்சிகளை மேற்கொண்டு அவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
இதையும் படிங்க : 'சொன்னதைச் செய்வோம் செய்வதைத்தான் சொல்வோம்'- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்