கோயம்புத்தூர்: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில், பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதாவது, தமிழ்நாட்டில் பால் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2 லட்சம் கறவை மாடுகள் வாங்க கடன் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான பாலின் தரத்துக்கு ஏற்ற விலை, தற்போது வழங்கப்படுகிறது. பாலின் தரத்திற்கு ஏற்ப விலை என்கின்ற நிலையை கொண்டு வந்துள்ளோம். பால் கொள்முதலுக்கான தொகை 10 நாட்களுக்கு ஒருமுறை பண பட்டுவாடா செய்து வருகிறோம்.
கோவை மாவட்ட ஆவின் பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தொழில் முனைவோராக விரும்பும் இளைஞர்களுக்கு சிறிய மாட்டுப் பண்ணைகள் அமைக்க மாவட்ட தொழில் மையம், தாட்கோ, டாம்கோ மூலமாக மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்கப்படும்.
புதிய ஆவின் பாலகம் அமைக்க படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், பெண்கள், கணவரை இழந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு கடனுதவி மற்றும் அவர்களுக்கான பயிற்சி போன்ற பணிகளை ஆவின் அலுவலர்கள் மூலமாக செய்து வருகிறோம். ஆவின் பாலகங்களில் (ஆவின் டீ கடைகள்) வெளிபொருட்கள் விற்பனை செய்தால், அதற்கான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும்.
மேலும், எம்ஆர்பி விலைக்கு தான் ஆவின் பால்கள் விற்கப்பட வேண்டும். ஆவினுடடைய பதிவு பெற்ற FRO-வாக இருந்து கொண்டு, விலையைக் கூட்டி விற்பனை செய்தால் கண்டிப்பாக அவர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படும். கோவை மாவட்டத்தில் 96 மருத்துவர்கள் இருக்கின்றனர். கால்நடை மையங்களில் உள்ள சேவைகளையும், நாங்கள் தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகிறோம்.
கரோனா காலத்தில் கால்நடைகளை பராமரிப்பதில் இடர்பாடுகள் மற்றும் சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து கால்நடைகளுக்கான முகாம்களை நடத்தி வருகிறோம். தொடர்ச்சியாக கடன்களையும் வழங்கி வருகிறோம். ஆவின் பால் மூலம் உற்பத்தி செய்யக் கூடிய பொருட்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆவின் பொருட்களின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த மாதம் ஆவின் விற்பனை 8 சதவீதம் உயர்ந்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 20 சதவீதம் ஆர்டர் வந்துள்ளது. ரேஷன் கடைகளிலும் ஆவின் பொருட்களை விற்பனை செய்ய ஊழியர்கள் தயாராக இருந்தால், ரேஷன் கடைகளுக்கும் ஆவின் பொருட்கள் விற்பனை செய்யலாம். கிராமப்புறங்களில் ஆவின் விற்பனையை அதிகரிப்பதற்கு தொழில் முனைவோர்களுக்கு அதற்கான முன்னுரிமைகள் அளிக்கப்படும்” என தெரிவித்தார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, ஆவின் பொது மேலாளர் பால பூபதி, மேயர் கல்பனா ஆனந்த குமார், துணை மேயர் ரா.வெற்றிச் செல்வன் உள்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: மருந்து கொடுக்காமல் 17 வயது சிறுமிக்கு பிரைமரி ஆஞ்சியோ பிளாஸ்ட் சிகிச்சை.. நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சாதனை!