கோயம்புத்தூர்: கோவை மாநகராட்சியில் உள்ள ரேஸ் கோர்ஸ் பகுதியில் செயற்கை நீரூற்று, நடைபாதைகள், உடற்பயிற்சி செய்ய ஏதுவான இடங்கள் மற்றும் குழந்தைகள் விளையாடுவதற்கு விளையாட்டு உபகரணங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், இன்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக கோவை வந்துள்ள மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தின் அருகில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபயிற்சி மேற்கொண்டார்.
மேலும், சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் செய்யப்பட்டுள்ள நடைபாதைகள், செயற்கை நீரூற்று ஆகியவற்றையும் அமைச்சர் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாட்டின் சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் முதலமைச்சர் வேகமாக செயல்பட்டு வருகிறார்.
38 வருவாய் மாவட்டத்தில் எட்டு கிலோ மீட்டர் நடைபாதையை அமைத்து, மரம் மற்றும் இருக்கை ஆகியவற்றையும் அமைத்து மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வது போன்ற பணிகளை மேற்கொள்ள முடிவெடுத்து உள்ளோம். ஜப்பானின் டோக்கியோவுக்கு சென்றபோது 8 கிலோ மீட்டர் ஹெல்த் வாக் அமைக்கப்பட்டுள்ளதைப் பார்த்தோம்.
மனிதர்கள் நாள்தோறும் 10 ஆயிரம் ஸ்டெப்ஸ் நடந்தால் உடல் சீராக இருக்கும். மக்களை நடப்பதற்கு பழக்க நடைபாதை அமைக்கப்படுகிறது. ‘நடை வருமுன் காப்போம்’ என்பதன் அடிப்படையில் நடைபாதை அமைக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, இன்று கோவையில் 8 கிலோ மீட்டர் பாதையை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது.
கடந்த வாரம் மதுரையில் 8 கிலோ மீட்டர் நடைபாதை இறுதி செய்யப்பட்டது. மக்கள் நல்வாழ்வுத் துறையைச் சேர்ந்த மாவட்ட அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பாதையை தேர்வு செய்யும் பணி தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது. இது தொடர்பான பணிகளை 38 மாவட்டங்களிலும் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.
செந்தில் பாலாஜிக்கு நேற்று முன்தினம் ரெகுலர் ரூம் என்ற அடிப்படையில் அறைக்கு வந்து உள்ளார். அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். கோவையில் கட்டமைப்பு சிறப்பாக உள்ளது. தமிழ்நாட்டிலேயே சிறந்த நடைபாதை கோவை பந்தய சாலையில் உள்ளது.
வாலாங்குளத்தைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் நடைபாதை அமைக்கும் பணியை மாநகராட்சி செய்து வருகிறது. கோவை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன், கோவை அரசு மருத்துவமனைக்கு சிடி ஸ்கேன் வேண்டும் என கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கை தொடர்பாக இன்று அங்கு செல்ல உள்ளோம்.
நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட மூன்று திட்டங்களைச் செயல்படுத்த உள்ளோம்” எனத் தெரிவித்தார். இந்த நிகழ்வில் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் மற்றும் மாநகராட்சி துணை மேயர் வெற்றிச் செல்வன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: நேரு ஸ்டேடியத்தில் வைத்தா அறுவை சிகிச்சை செய்ய முடியும்..? அமைச்சர் மா. சுப்பிரமணியன் கேள்வி