மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள தமிழ்நாடு-கேரள எல்லைப் பகுதியில் கடந்த ஐந்து நாட்களாக பலத்த மழை பெய்துவருகிறது. இதனால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள மேல் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா உள்ளிட்ட அணைப் பகுதிகளில் உள்ள அணைகளிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த அணைகளில் திறந்துவிடப்படும் தண்ணீர் பில்லூர் அணையை வந்தடைகிறது. 100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணை கடந்த ஐந்து நாட்களாக நிரம்பி உபரிநீர் படிப்படியாக பவானி ஆறு வழியாக திறந்துவிடப்பட்டுகிறது.
இதன் காரணமாக மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளான வனபத்ரகாளியம்மன் கோயில், நெல்லிதுறை, சாமான வாட்டர் ஹவுஸ், பவானி மேம்பாலம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்து வீடுகள் சேதமடைந்தன.
இதனால் பாதுகாப்புக் கருதி அங்கிருந்த பொதுமக்கள் மேடான பகுதிகளுக்கு வருவாய்த் துறையினர் அனுப்பிவைத்தனர். இந்த நிலையில் இன்று காலை தமிழ்நாடு வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது பேசிய அவர், நீலகிரி, பவானி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக பில்லூர் அணை நிறைந்து பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திடீரென அதிகரிக்கும் இந்த வெள்ளப் பெருக்கை வருவாய்த் துறையினர் கண்காணித்து-வருகின்றனர். பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு அனைத்துத் துறையினரும் தயார் நிலையில் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.