கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள உடுமலைபேட்டையைச் சேர்ந்தவர் உடுமலை ராதாகிருஷ்ணன். இவர் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு அமைச்சராக பதவி வகித்துவருகிறார். இந்நிலையில், ராதாகிருஷ்ணனுக்குச் சொந்தமான கார் ஒன்றை அதிமுக பிரமுகர் கோபால் என்பவர் உடுமலை - பழனி நெடுஞ்சாலை வழியாக ஓட்டிச் சென்றார்.
கார் மரப்பேட்டை வீதி அருகே சென்றபோது கோபால் காரை வேகமாக இயக்க முயன்றுள்ளார். அப்போது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடந்து சென்றவர்கள் மீது மோதி விபத்துகுள்ளானது. அதில், அமைதி நகர் அமாவசை, மோதிபுரம் வீரமுத்து என்ற இருவர் படுகாயமடைந்தனர். இதைக்கண்ட அவ்வழியாக வந்த பொதுமக்கள் உயிருக்குப் போராடிய இருவரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.
அங்கு இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்களை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லுமாறு அறிவுறுத்தினர். அதையடுத்து, அவர்கள் இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து மகாலிங்கபுரம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலையடுத்து, காவல் துறையினர் காரை இயக்கிவந்த கோபாலிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த வீரமுத்து சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அமாவாசைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: லாரி மீது மோதிய பேருந்து... இருவர் உயிரிழந்த பரிதாபம்!