கோவை: கோவை காளப்பட்டி அருகேயுள்ள வீரியம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரோட்டரி கிளப் சார்பில் கட்டப்பட்ட 31 லட்சம் ரூபாய் மதிப்பிலான கட்டடங்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்துவைத்தார்.
அப்போது, யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 750 இடம் பிடித்து கோவையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் ரஞ்சித்துக்கு பொன்னாடை அணிவித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாராட்டி கௌரவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாடு முதலமைச்சர் வேகத்துடன் செயல்பட்டு வருகிறார். கல்வியை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்ல இதுபோன்ற தன்னார்வலர்கள் முன் வருகிறார்கள். பணமாகக்கூட வேண்டாம் ஒரு பள்ளிக்கூடத்திற்கு தேவையான 4 இருக்கைகள்கூட வழங்கலாம்.
ஊடகங்கள் மூலம் இதுபோன்ற நல்ல செயல்களில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கடந்த 5 ஆண்டுகளாக சட்டப்பேரவையில் நிறைய குரல் கொடுத்துள்ளோம். சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சி சார்பில் ஒருமனதாக தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நீட் தேர்வு தகுதியான முறையில் நடைபெறுவதில்லை என்பது மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த மோசடியே உதாரணம். 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி திறப்பு தொடர்பாக இன்னமும் முடிவெடுக்கப்படவில்லை.
ஒவ்வொரு மாவட்டத்திலும் பாதிப்புகள் வேறுபடுவதால், வல்லுநர்கள் மற்றும் முதலமைச்சரின் ஆலோசனையை கேட்டு பள்ளி திறப்பு முடிவு எடுக்கப்படும். தனியார் பள்ளிகள் மாணவர்களை கண்டிப்பாக வர சொல்லக்கூடாது என நீதிமன்றமும், நாமும் வலியுறுத்தியுள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்ற மாற்றுத் திறனாளி - கடும் முயற்சிக்கு குவியும் பாராட்டுகள்