கோவை மாவட்டம், சோளக்காட்டுப்பாளையம் பகுதியில் ஜெயராம் டெக்ஸ்டைல் என்ற பெயரில் நூற்பாலை இயங்கி வருகிறது. இந்த நூற்பாலையில், நூற்றுக்கும் மேற்பட்ட வடமாநில இளைஞர்கள் பணிபுரிந்துவந்தனர்.
இந்நிலையில் கரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் நிறுவனங்கள் இயங்காத நிலையில், இங்கு சரிவர ஊதியம் கொடுக்காததால் 50க்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர்.
இதில், நூற்பாலையில் வேலை செய்த 40க்கும் மேற்பட்ட வடமாநில இளைஞர்கள் வெளியேறி ஒடிசாவிற்கு நடந்தே பயணிக்கத் தொடங்கிய நிலையில், கருமத்தம்பட்டி சோதனைச் சாவடியில் இருந்த காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள், சோளக்காட்டுப்பாளையத்தில் உள்ள ஜெயராம் நூற்பாலையில் நாங்கள் பணிபுரிந்து வந்தோம், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக எங்களுக்கு ஊதியம் வழங்கவில்லை. ஊதியம் கேட்டதற்காக எங்களை நூற்பாலை உரிமையாளர் திருமூர்த்தி அடித்து உதைத்தார் என காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இவர்களுக்கு உணவளித்து காவல் நிலையம் அழைத்துச் சென்ற காவலர்கள், வட்டாட்சியர், வருவாய்த் துறையினரையும் வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து வட்டாட்சியர் மீனாகுமாரி தலைமையில் வருவாய்த்துறையினரும் காவல்துறையினரும் சோளக்காட்டுப்பாளையத்தில் உள்ள ஜெயராம் நூற்பாலைக்கு சென்று ஆய்வு நடத்தி உரிமையாளர் திருமூர்த்தியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : நாளை முதல் டாஸ்மாக்: காவல் துறை தலைவர் சுற்றறிக்கை