கோவை மேட்டுப்பாளையம் சாலை ஜி.என்.மில்ஸ் பகுதி திருப்பதி நகரில் இரண்டு வாரங்களாக குடிநீர் வரவில்லை என அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஐந்து அல்லது ஆறு நாள்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்த குடிநீர் தற்போது 12 நாள்களுக்கு மேலாகியும் வரவில்லை என்றும், இதுகுறித்து பலமுறை அரசு அலுவலர்களிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மறியலில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
மேலும், இப்பகுதி பஞ்சாயத்துக்குட்பட்டு இருந்தபோது கூட சிரமம் இல்லை என்றும், மாநகராட்சிக்கு கீழ் வந்தவுடன் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பிரச்னை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மாநகராட்சி ஆணையர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிங்க: மதுரையில் குடிநீர் ஆய்வு மாதிரித்திட்டம் தொடக்கம்!