பொள்ளாச்சி: கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று, கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சரளப்பதி கிராமத்தை முகாமிட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக அப்பகுதியில் உலாவும் மக்னா யானை, விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது. காட்டு யானையின் அட்டகாசத்தால் அச்சம் அடைந்துள்ள கிராம மக்கள், மாலை 6 மணிக்கு மேல் வெளியே செல்வதில்லை எனக் கூறுகின்றனர்.
இந்நிலையில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மே 16) விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மக்னா யானையைப் பிடிக்க வலியுறுத்தி, கைகளில் பதாகைகளை ஏந்தியபடி விவசாயிகள் வந்திருந்தனர். அப்போது, யானையைப் பிடிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து சார் ஆட்சியர் பிரியங்காவிடம் தென்னை விவசாயிகள் சங்கத்தினர் கேள்வி எழுப்பினர். இதைத் தொடர்ந்து, கூட்டத்தில் பங்கேற்ற வனத்துறை அதிகாரியிடம் சார் ஆட்சியர் பிரியங்கா விளக்கம் கேட்டார். மக்னா யானையைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரி விளக்கம் அளித்தார். எனினும், உரிய விளக்கம் தரப்படவில்லை எனக் கூறிய விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்தனர்.
இதுகுறித்து விவசாயி ஸ்டாலின் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், "மக்னா யானையைப் பிடிக்க பலமுறை அதற்கு மயக்க ஊசி போடப்பட்டுள்ளது. அதுவே அதன் உயிருக்கு ஆபத்து தான். மேலும் சரளப்பதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விளைநிலங்களை யானை சேதப்படுத்தி வருகிறது. இரவு நேரங்களில் வெளியே செல்லவே அச்சமாக உள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் விட்டாலும், யானை மீண்டும் ஊருக்குள் வந்துவிடுகிறது. எனவே, யானையைப் பிடித்து, வண்டலூர் உயிரியல் பூங்காவில் விட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.
கிருஷ்ணகிரி வனப்பகுதியில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியேறிய மக்னா யானை, விளைநிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தியது. பின்னர் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர், ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்ஸ்லிப் அருகே உள்ள யானை குந்தி அடர் வனப்பகுதியில் விட்டனர். எனினும் அங்கிருந்து வெளியேறிய யானை, கோழிகமுத்தி, டாப்ஸ்லிப், மலைவாழ் மக்கள் குடியிருப்பு வழியாக தனியார் தோட்டத்துக்குள் புகுந்தது.
பின்னர் கோவை மாவட்ட கள இயக்குநர் ராமசுப்பிரமணியம் உத்தரவின் பேரில், பொள்ளாச்சி துணைக் கள இயக்குனர் பார்க்கவ் தேஜா தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் யானையின் நடமாட்டத்தை கண்காணித்தனர். இதையடுத்து இரண்டாவது முறையாக மயக்க ஊசி செலுத்தி யானை பிடிக்கப்பட்டது. மானாம்பள்ளி வனச்சரகம் மந்திரி மட்டம் அடர்ந்த வனப்பகுதியில் காலர் ஐடி பொருத்தப்பட்டு யானை விடப்பட்டது. காலர் ஐடி செயலிழந்த நிலையில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை, சரளப்பதி பகுதியில் முகாமிட்டது.
பின்னர் டாப்ஸ்லிப்பில் இருந்து சின்னத்தம்பி, அரிசி ராஜா, ராஜவரதன் ஆகிய மூன்று கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு, மக்னா யானையை விரட்டும் பணி நடைபெற்றது. அப்போது வனத்துறையினர் சென்ற ஜீப்பை மக்னா யானை தாக்கியதில், வேட்டை தடுப்புக் காவலர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்துக்குப் பிறகு வனத்துறை சார்பில் நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டு யானையை விரட்டும் பணி நடந்தது. ஆனால் அதேநேரம், கும்கி யானைகளை வனத்துறையினர் மீண்டும் முகாமுக்கு அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மலேசியாவிலிருந்து திருச்சி வந்த இரண்டு விமானங்களில் தங்கம் கடத்தல்!