கோவை அவினாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளி மைதானத்தில் காவல் துறை இயக்குநர் திரிபாதி தலைமையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சமீபகாலமாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் அதிகரித்துவருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு கோவை அருகே உள்ள கேரள மாநிலமான பாலக்காடு மாவட்டத்தில் காவல் துறையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மேலும் அக்குழுவிலிருந்த மூன்று மாவோயிஸ்டுகள் தப்பிச்சென்றனர். இதையடுத்து தமிழ்நாடு எல்லைப் பகுதிகளில் காவல் துறையினர் பாதுகாப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தினர். அதேபோல மலை கிராமங்களில் வசித்துவரும் பழங்குடியின மக்களுக்கு மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருந்தால் காவல் துறையினருக்குத் தகவல் தரும்படி விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் கோவை வந்த தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் திரிபாதி அதிரடிப்படை உயர் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு அதிரடிப்படை கண்காணிப்பாளர் மூர்த்தி உள்ளிட்ட பல உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதைத்தொடர்ந்து இடைவெளிக்குப் பிறகு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அயோத்தியா தீர்ப்பு வெளிவரவுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தவும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் ஆலோசனை வழங்கப்படவுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: ’சாதியக் கொலைகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ - நெல்லையின் புதிய எஸ்பி