ஈஷா பசுமை கரங்கள் திட்டம் சார்பில் 2019ஆம் ஆண்டில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 50 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் தொடக்கமாக உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று கோவை, ஈரோடு, சேலம், மதுரை, வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, நாமக்கல், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் வ.உ.சி மைதானத்தில் பசுமை விழிப்புணர்வு மாரத்தான் போட்டி இன்று நடத்தப்பட்டது.
இந்த மாரத்தான் போட்டியை கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவந்த் குமார், அதிவிரைவுப்படை 105 பட்டாலியன் துணை காமாண்டெண்ட் சுந்தரக்குமார், கங்கா மருத்துவமனையின் இயக்குநர் ராஜசபாபதி, ஃப்ரண்ஸ்டெக் பெல்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு தொடக்கிவைத்தனர்.
ஐந்து கி.மீ தொலைவுகொண்ட இப்போட்டியில், சிறியவர்கள், பெரியவர்கள் என 300க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக கலந்துகொண்டனர். இறுதியாக ஓட்டப்பந்தய வீரர்களுக்கு மரக்கன்றுகள் பரிசாக அளிக்கப்பட்டது.