ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் அடைகாப்பான் (29), இவர் மனைவி நாகம்மாள்(25). இவர்கள் கடந்த 4 நாட்களுக்கு முன் கோவை வடவள்ளி பகுதி கஸ்தூரிநாயக்கன் பாளையத்தில் புதிதாகக் குடிவந்து உள்ளனர். அடைகாப்பான் பிளம்பராக பணியாற்றி வந்த நிறுவனத்தில் மர அறுவை இயந்திரத்தைத் திருடி வைத்துள்ளார்.
இதுகுறித்து நிர்வாக தரப்பினர்கள் அடைகாப்பானிடம் விசாரித்தபோது இயந்திரம் திருடியதை ஒப்புக்கொண்டு, மறைத்து வைத்திருந்த இடத்தையும் கூறியுள்ளார். நிறுவனத்தினர்கள் தன் மீது காவல்துறையில் புகார் அளித்து விடுவார்களோ என்ற பயத்திலிருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் (அக்.19) மதியம் தலை வலிப்பதாகக் கூறி மனைவியை மாத்திரை வாங்கி வரும்படி அனுப்பியுள்ளார்.
நாகம்மாள் மாத்திரை வாங்கி விட்டு வீடு திரும்பியபோது கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு அடைகாப்பானை அழைத்துள்ளார். கதவு திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்துப் பார்த்தபோது, அடைகாப்பான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதுகுறித்து வடவள்ளி காவல்நிலையத்திற்குத் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல..
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ கீழே உள்ள 24 மணி நேர தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு மையம் - 044- 2464 0050, மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104
இதையும் படிங்க: கரோனா தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்!