கோவைபுதூர் அருகே உள்ள குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ்(35). இவரது மனைவி நந்தினி (28). நந்தினி அதே பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பிளம்பர் வேலை செய்து வந்தார். இந்த தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த சூழலில் நந்தினி செல்ஃபோனில் அடிக்கடி யாருடனோ பேசிக்கொண்டு இருப்பதாக கணவருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதேபோல செல்போன் உரையாடல், டிக் டாக் செயலியை பயன்படுத்துவது தொடர்பாகவும் இருவருக்குமிடையே வாக்குவாதம் எழுந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு நந்தினி கடந்த ஒருவருடமாக கணவனை பிரிந்து குளத்துப்பாளையம் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்திருக்கிறார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை மதியம் கனகராஜ் செல்போன் மூலம் நந்தினிக்கு அழைத்தபோது நீண்ட நேரமாகியும் தொடர்புகொள்ள முடியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கனகராஜ், குடிபோதையில் நந்தினி வேலை செய்யும் கல்லூரி வளாகத்துக்கு சென்று அவரிடம் தகராறு செய்துள்ளார்.
அப்போது ஆத்திரத்தில் கனகராஜ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நந்தினியின் வயிறு உள்ளிட்ட 3 இடங்களில் குத்தியுள்ளார். இதில் நந்தினி ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் மயங்கி விழுந்தார். பின்னர் கனகராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் நந்தினியை கொண்டு சென்றனர். ஆனால் நந்தினி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மதுக்கரை காவல்துறையினர் கனகராஜை கைது செய்துள்ளனர்.