செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜரத்தினம். கட்டடத் தொழிலாளியான இவர், கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் இவரது மனைவிக்கு உடல் நிலை சரியில்லாததால் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளார்.
ஆனால் அவர் மனைவி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்துள்ளார். கரோனா காலம் என்பதால் ராஜரத்தினம் ஊருக்கு செல்ல முடியாமல் சாலை ஓரத்திலேயே படுத்தும் அம்மா உணவகத்தில் உணவு உட்கொண்டும் இருந்துள்ளார்.
இந்நிலையில் இன்று (ஜூலை 30) கோவை வாலாங்குளத்தில் மீன்பிடித்து விற்பனை செய்யலாம் என்று முடிவு செய்து மீன் பிடித்து கொண்டிருக்கையில் அங்கு இருப்பவர்கள் இவரிடம் மீன் பிடிக்கக்கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுப்படுள்ளனர்.
இதையடுத்து ராஜரத்தினமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதில் ராஜரத்தினத்தை அங்கிருந்தவர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் தலையில் ஏற்பட்ட காயத்துடனும் கை கால்களில் ரத்தம் வழியும் நிலையிலும் ராஜரத்தினம் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்தார்.
ரத்தம் வழிய வழிய வந்த ராஜரத்தினத்தை அங்குள்ள பாதுகாப்பு காவலர்கள் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தி அவரை காவலர் வாகனத்திலேயே கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது ராஜரத்தினம் தனக்கு நீதி வேண்டும் என்றும் ஊருக்கு செல்ல ஏற்பாடு செய்து தருமாறும் கண்ணீருடன் கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க... குடும்பத் தகராறால் தற்கொலை முயற்சி: தாய் மீட்பு, குழந்தைகளை தேடும் பணி தீவிரம்