கோயம்புத்தூர்: மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கல்லாறு வனப்பகுதியில் மேட்டுப்பாளையம் வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர். அப்போது, உதகை மலை ரயில் பாதையில் துர்நாற்றம் வீசியதை அறிந்து, வனத்துறையினர் சோதனை செய்துள்ளனர். அப்போது, ரயில்வே பாலத்தின் கீழ் ஆண் குட்டி யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதைக் பார்த்துள்ளனர்.
இதனை அடுத்து, வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக, உதவி வனப்பாதுகாவலர் தினேஷ் குமார், வனச்சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் வனத்துறை கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையிலான மருத்துவக்குழுவினர் விரைந்து சென்று ஆய்வு செய்ததில், உயிரிழந்த ஆண் யானைக்கு சுமார் இரண்டு வயது இருக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது.
மேலும், புலி அல்லது சிறுத்தை தாக்கியதில் ஆண் குட்டி யானை உயிரிழந்து இருக்கலாம் எனவும் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அதன் உடல் ஊன் உண்ணிகளுக்காக அங்கேயே விடப்பட்டது. தொடர்ந்து, அந்தப் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தி வனத்துறையினர் ஊன் உண்ணிகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லக்கூடிய மலை ரயில் பாதையில் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. சம்பவம் நடைபெற்ற இடம் அடர்ந்த வனப்பகுதி என்பதால் புலி, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் இருப்பதாலும், இதனை உணவிற்காக வேட்டையாடி இருக்கலாம்” என்றனர். மேலும், விலங்குகளைக் கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது என்றும், சிசிடிவி கேமராவில் பதிவாகும் காட்சிகளைக் கொண்டு மற்ற விலங்குகளின் நடமாட்டத்தைக் கண்டறிய முடியும் எனவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:“சட்ட விரோதமாக விளம்பரப் பலகைகள் வைப்பதை தடுப்பது முக்கியமானது” - சென்னை உயர் நீதிமன்றம்