கோயம்புத்தூர்: தமிழகத்தில் அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திட வழிவகுக்கும் வகையில் “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தை அரசு செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக கோவை அட்டகட்டியில், மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி நேற்று (ஜன.2) நடைபெற்றது. இதில் மின் இணைப்பு வழங்குதல், பட்டா மாற்றுதல், சொத்துவரி, தண்ணீர் வரி, திடக்கழிவு மேலாண்மை, பொருளாதார குற்றங்கள் தொடர்பான புகார்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை, உபகரணங்கள் பெறுதல், கடன் உதவித்தொகை, வீடு அமைத்தல், பெண் கல்வித்திட்டம், குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் குறித்த கோரிக்கைகளை பொதுமக்கள் மனுவாக எழுதி, உரிய அதிகாரிகளிடம் கொடுத்தனர்.
இது குறித்து வால்பாறை நகர மன்றத் தலைவர் அழகுசுந்தர வள்ளி கூறுகையில், “முதலமைச்சரின் மக்களுடன் முதல்வர் திட்டமானது, வால்பாறையில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியானது அட்டகட்டி, வால்பாறை சமுதாயம் நலக்கூடம், முடிஸ், கருமலை, சோலையார் ஆகிய பகுதிகளில் நடைபெறுகிறது” என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து, திமுக நகர செயலாளர் சுதாகர் கூறுகையில், “கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்கினார். கடந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட மனுக்கள், மக்களுடன் முதல்வர் திட்டம் மூலம் 30 நாட்களில் தீர்வு காணப்படுவது மகிழ்ச்சியாக உள்ளது” என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வால்பாறை நகராட்சி தலைவர் அழகுசுந்தர வள்ளி, தாசில்தார் வாசுதேவன், நகர செயலாளர் சுதாகர், வார்டு கவுன்சிலர்கள் செல்வகுமார், கனகு மணி மற்றும் அதிகாரிகள், வனத்துறையினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 'தாய் மடியே சுகம்'.. தாயை பிரிந்த குட்டி யானை மீண்டும் தாயுடன் சேர்ந்த அழகிய தருணம்!