கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அதில், ' இஸ்லாமியர்கள், ஈழத்தமிழர்களை தனிமைப்படுத்தும் சட்டத்தை நிராகரிக்கிறோம், டெல்லி பல்கலைக்கழக மாணவர்களைத் தாக்கிய காவலர்களைக் கண்டிக்கிறோம். பாசிச கட்சிக்கு எதிராகப் போராட்டம் தொடரும்' என முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது, மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சூர்யா செதியாளர்களிடம் பேசுகையில், ' மத்திய அரசு தேவையில்லாமல் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் உள்ள நிலையில், மக்கள் மேலும் அவதிக்குள்ளாகும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகின்றது' என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், ' போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதைக் கண்டிப்பதாகவும், மத்திய அரசு எப்படி 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று கூறி மக்களை அவதிக்கு உள்ளாக்கியதோ அதே போல், இந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் மக்கள் அனைவரும் நடுத்தெருவில் நிற்க வேண்டும் ' எனத் தெரிவித்தார்.
இதே போல், தேசிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கண்டித்து பட்டுக்கோட்டை அருகில் உள்ள மதுக்கூர் பேரூராட்சியில் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:
காவல் துறை உத்தரவை மீறி திமுக போராட்டம் நடத்தினால் அதனைப் பதிவு செய்ய வேண்டும்: நீதிமன்றம்!