கோயம்புத்தூர் மாவட்டம் சூலூரில் உள்ள இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானப்படை தளத்தில் போர் விமானங்களை பழுது பார்த்தல், வீரர்களுக்கு விமான பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக டோர்னியர் ரக விமானங்களின் பராமரிப்பு பணிகள் துல்லியமாக, சிறப்பாகவும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சூலூர் விமானப்படை தளம் 100 டோர்னியர் ரக விமானங்களுக்கான பராமரிப்பு - சேவை பணியை மேற்கொண்டதற்கான இலக்கை எட்டியுள்ளது.
இதனை நினைவு கூறும் நிகழ்வு சூலூர் விமானப்படை தளத்தில் நடைபெற்றது. இதற்கு தலைமையிட பொறியியல் சேவைகள் பிரிவு அலுவலர் ஏர் வைஸ் மார்சல் சி.ஆர்.மோகன் தலைமை வகித்தார்.
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவன நிர்வாகிகள், பிற விமானப்படை இயக்குதல் பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முதல் டோர்னியர் விமானத்தின் பராமரிப்பு பணியை மேற்கொண்ட முன்னாள் விமானப்படை அலுவலர்களும் இதில் கலந்து கொண்டனர்.
நிகழ்வில், பழுது பார்க்கப்பட்ட டோர்னியர் விமானத்தின் சாவி உள்ளிட்டவை விமானத்தை இயக்கும் குழுவிடம் சூலூர் விமானப்படை தள பழுது நீக்கும் மையத்தின் ஏர் கமாண்டிங் அலுவலர் பி.கே.ஸ்ரீகுமார், குழுவினரால் வழங்கப்பட்டது.
கடந்த 2000ஆம் ஆண்டு சூலூர் விமானப்படை தளத்தில் டோர்னியர் ரக விமானங்களுக்கு பழுது - பராமரிப்பு மேற்கொள்ளும் பணி தொடங்கப்பட்டது. குறைந்த காலத்தில் இந்த இலக்கை சூலூர் விமானப்படை தளம் எட்டியுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சூலூர் விமானப்படை தளத்தில் போர் விமான சாகச நிகழ்ச்சி