கோயம்புத்தூர்: கிருஷ்ணகிரியில் பிடிக்கப்பட்ட மக்னா யானை மூன்றாவது முறையாக மயக்க ஊசி செலுத்தி வனத்துறை வாகனம் மூலம் ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை வனச்சரகத்துக்கு உட்பட்ட சின்னக்கல்லார் வனப்பகுதியில் விடப்பட்டது.
அதைத் தொடர்ந்து, மக்னா யானைக்கு ரேடியோ காலர் ஐடி (சேட்லைட்) பொருத்தப்பட்டு, யானை நடமாட்டத்தை வனத்துறை அமைத்துள்ள தனிக் குழு தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், அப்பகுதி தேயிலை தோட்ட தொழிலாளர் நிறைந்த பகுதி என்பதால், குடியிருப்பு பகுதிக்கு வராமல் இருக்க வனத்துறை உயர் அதிகாரி உத்தரவின் பேரில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வந்தனர்.
அதைத் தொடர்ந்து, மூன்று மாதங்களாக தேயிலைத் தோட்டம் மற்றும் வனப்பகுதியில் நடமாடி வந்த மக்னா யானை, வால்பாறையை விட்டு இடம் பெயர்ந்த நிலையில், தற்போது பொள்ளாச்சி வனச்சரகம் வில்லோனி நாகமலை பகுதியில் உயிரிழந்து கிடந்துள்ளது. இதை அப்பகுதி வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணியின் போது கண்டறிந்தனர்.
இதையும் படிங்க: நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னரும் ராபின் டிராவல்ஸ்-க்கு 70 ஆயிரம் அபராதம்: கேரளா மோட்டார் வாகனத்துறை அதிரடி!
இதை அடுத்து வேட்டை தடுப்பு காவலர்கள் வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததின் பேரில், நாளை (நவ.19) கால்நடை மருத்துவர்களைக் கொண்டு பிரேத பரிசோதனை செய்யப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், மக்னா யானை உயிரிழப்பு குறித்து தற்போது வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மக்னா யானை உயிரிழந்த சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும்: தவாக தலைவர் வேல்முருகன் ஆவேசம்!