தமிழ்நாட்டில் லாட்டரிக்குத் தடை விதித்திருந்தாலும் மேற்கு வங்காளம், சிக்கிம் போன்ற இந்தியாவின் பல மாநிலங்களில் லாட்டரி தொழில் இன்றும் அமோகமாக நடைபெறுகிறது. இதனால் லாட்டரி அதிபர் மார்ட்டின் தமிழ்நாட்டைத்தாண்டி , கர்நாடகாவிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் தனது சாம்ராஜ்யத்தை விரிவாக்கினார்.
லாட்டரி தொழில் மட்டுமல்லாமல் மருத்துவத் துறை, தொலைக்காட்சி நிறுவனம், ஆலைகள், சினிமாத் துறை உள்ளிட்டவைகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்திவந்தார். அரசியலிலும் தனக்கான இடத்தை பதிவு செய்ய முயற்சித்துவருகிறார். இதனால், பலமுறை வருமானவரித் துறை, சிபிஐ சோதனையிலும் மார்ட்டின் சிக்கியுள்ளார்.
இந்நிலையில், சிக்கிம் லாட்டரி சட்டப் பிரிவுகளை மதிக்காமல், மார்ட்டின் நிறுவனம் அரசை ஏமாற்றியுள்ளதாக வந்த புகாரை அடுத்து, மார்ட்டினின் ஃபியூச்சர் கேமிங் ஹோட்டல் நிறுவனத்தின்மீது கிரிமினல் வழக்கு பதியப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக மார்ட்டினின் 61 வீடுகள், 85 காலி மனைகள் உட்பட ரூ.119.60 மதிப்பிலான அசையா சொத்துகளை முடக்கியுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.