கோவை: வருகின்ற ஏப்ரல் 4ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் அன்றைய தினம் தமிழ்நாடு அரசால் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதும் இறைச்சிகளை விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆட்டு இறைச்சி, மாட்டு இறைச்சி, கோழி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி கடைகளை மூடும்படி கோவை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் அன்றைய தினம் கோவை மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்டு வரும் உக்கடம் ஆடு அறுவைமனை, சிங்காநல்லூர் ஆடு அறுவைமனை, போத்தனூர் மற்றும் கணபதி பகுதியில் உள்ள மாடு அறுவை மனைகள் செயல்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி செயல்படுவோர் மீது மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
அதேபோல், மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுக்கூடங்கள், மதுபானக் கடைகள், அதனுடன் இணைக்கப்பட்ட அனைத்து பொழுதுபோக்கு மனமகிழ்மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஹோட்டலில் செயல்படும் மதுக்கூடம் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யும் கடைகள் வருகின்ற ஏப்ரல் 4ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி தினம் Dry Dayஆக கடைபிடிப்பதால் மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக்கூடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
விதிமுறைகளுக்கு முரணாக, அந்த தேதியில் விற்பனை செய்பவர்கள் மீது, சட்ட விதிகளின்படி, நடவடிக்கை மேற்கொள்ளப்படும்''என மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தில் குருத்தோலை பவனி!