கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதி வால்பாறை. மொத்தம் 48 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட இந்த மலைப்பாதையில் யானை, புலி, சிறுத்தை, செந்நாய், கரடி, காட்டு மாடு, வரையாடு உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன.
இதனால் வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் பயணிக்கும் போது வாகனத்தை நிறுத்தக் கூடாது என சுற்றுலாப்பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை இரண்டு சுற்றுலாப் பயணிகள் அட்டக்கட்டி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வனப்பகுதியை விட்டு வெளியே வந்த சிறுத்தை ஒன்று சாலையில் நடந்து சென்றுள்ளது. பின் வாகனத்தில் வருபவர்களை கண்ட சிறுத்தை, மீண்டும் வனப்பகுதியில் சென்றது.
இதை செல்போனில் வீடியோவாக எடுத்த வாகன ஓட்டி ஒருவர், அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். தற்போது இந்த வீடியோ வாட்ஸ்அப்பில் பரவி வருகிறது. சமீபகாலமாக வனவிலங்குள் காட்டில் இருந்து சாலை, வீடு இருக்கும் பகுதிகளுக்கு வருவது அதிமாகி வருவதால், இதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.