கோயம்புத்தூர்: கணுவாய் பகுதியை சேர்ந்தவர் அஸ்வின். இவர் யமுனா நகர் பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களாக அவரது பண்ணையில் இருந்து கோழிகள் அடிக்கடி காணாமல் போனதாக தெரிகிறது. இதனை அடுத்து தனது கோழிப் பண்ணையில் சிசிடிவி கேமரா பொருத்திய அஸ்வின் அதனை கண்காணித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை கோழிகள் காணாமல் போன நிலையில் சிசிடிவி காட்சிகளை அஸ்வின் ஆய்வு செய்துள்ளார். அப்போது அதிகாலை 4 மணி அளவில் கோழிப்பண்ணைக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று பண்ணையில் இருந்த கோழியை தூக்கிச் சென்றது பதிவாகி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து வனத்துறையினருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார். அங்கு வந்த வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்ததுடன் அதனை கண்காணிக்கும் வகையில் மலை அடிவாரத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே, இந்த பகுதியில் அடிக்கடி சிறுத்தை நடமாட்டம் இருந்த நிலையில் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. வீடுகளில் புகுந்து நாள்தோறும் கோழிகளை தூக்கிச் செல்லும் சிறுத்தையால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளதால் உடனடியாக அதனை கூண்டு வைத்து பிடித்து வேறு இடத்தில் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ரூ.2 கோடி பணத்துடன் கடத்தப்பட்ட காரை சாலையோரம் விட்டு சென்ற கொள்ளையர்கள்