கோயம்புத்தூர்: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய், த்ரிஷா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. லோகேஷ் படம் என்றாலே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிறைந்திருக்கும். அந்த அளவிற்கு அவரும் படத்தில் ரசிகர்களின் ஏக்கத்தைப் பூர்த்தி செய்வார்.
அதைப்போல் தற்போது லியோ படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஒரு பக்கம் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டு இருக்கும் நேரத்தில், மறுபக்கம் கடும் சர்ச்சைகளிலும், பிரச்சனைகளிலும் சிக்க வருகிறது. பாடலில் தொடங்கி, தற்போது திரையரங்கு டிக்கெட் வரை லியோவின் சர்ச்சை குறைந்தபாடில்லை
வருகின்ற 19-ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், படத்திற்கான டிக்கெட் முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. இந்த நிலையில் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் திரையரங்கில் வழக்கமாக பால்கனி டிக்கெட்டின் விலை 190 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருக்கும்.
ஆனால், தற்போது விஜய் நடிப்பில் வெளியாக உள்ள லியோ திரைப்படத்திற்கு பால்கனியின் டிக்கெட் விலை 200 ரூபாய் என்றும் அதோடு சேர்த்து டீ,காபி தின்பண்டங்கள் குளிர்பானங்கள் என அனைத்தையும் சேர்த்து காம்போ பேக் எனக் கூறி 450 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்த வீடியோவில் திரையரங்கில் பணியாற்றும் ஒருவர், "லியோ படத்தின் டிக்கெட் விலை 200 ரூபாய். அதோடு சேர்த்து பாப்கார்ன் அல்லது பப்ஸ் மற்றும் ஒரு குளிர்பானத்துடன் 450 ரூபாய்" எனக் கூறுகிறார். காம்போ இல்லாமல் டிக்கெட் கிடைக்குமா என்று கேட்கப்படுவதற்கு அவ்வாறு வாங்க முடியாது என்று பதிலளிக்கிறார்.
திரையரங்குகளில் டிக்கெட் கட்டணங்களை அதிகப்படுத்தக் கூடாது என்றும், அதேபோல சரியான பார்க்கிங் வசதி, திரையரங்குகளில் சுகாதாரமான சூழ்நிலை போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டும் என்ற சமீபத்தில் தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. மேலும் கோவை மாவட்ட ஆட்சியர் இது குறித்த சுற்றறிக்கையை, கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் அனுப்பி வைத்து எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் தனியார் திரையரங்கம் ஒன்று காம்போ பேக் உடன் டிக்கெட் விற்பனை செய்வது, பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திரையரங்கில் ஆன்லைனில் புக்கிங் செய்யும் போது காம்போவுடன் புக்கிங் காண்பிக்கப்படவில்லை. தேவைப்பட்டால் தின்பண்டங்கள் குளிர்பானங்கள் வாங்கி கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரையரங்கில் வழக்கமாக Lounge என்ற இருக்கைக்கு மட்டும் வழக்கமாக 350 - 400 ரூபாய்(Combo Ticket) டிக்கெட் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க: லியோ வசூலில் பங்கு சம்பந்தமான பேச்சுவார்த்தை நீட்டிப்பு - டிக்கெட் முன்பதிவில் தாமதம்!