கோவை மாவட்டம், மதுக்கரை வட்டம், திருமலையாம்பாளையம் பேரூராட்சியில் கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு, ரூ. 3 லட்சம் மதிப்புள்ள துப்புரவு வாகனம் ஒன்று வாங்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் பழுதடைந்துள்ள நிலையில், பேரூராட்சி நிர்வாகம் தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் வாகனத்தை வாங்கி இயக்கி வருகிறது.
இந்த ஒப்பந்த வாகனத்தை இயக்கும் ஓட்டுநர் மணிகண்டன், வாகனத்தைச் சரிவர இயக்காமல், டீசல் போன்றவற்றை கையாடல் செய்வதாக அதேப் பகுதியைச் சேர்ந்த சட்டம் பயிலும் மாணவர் ரமேஷூக்குத் தகவல் கிடைத்தது.
இந்நிலையில் ரமேஷ் முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி, கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளித்துள்ளார். ஆனால், அவர் அளித்த மனுவிற்கு எந்த பதிலும் வராத நிலையில், கடந்த 25ஆம் தேதி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பேரூராட்சி செயல் அலுவலருக்கு, துப்புரவுப் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் வாகனத்தின் ஒப்பந்த நகல், குத்தகை விவரம் உள்ளிட்டவை குறித்து கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.
செயல் அலுவலரிடம் இருந்து பதில் வரும் என நினைத்திருந்த ரமேஷூக்கு, அதிர்ச்சி தான் காத்திருந்தது. அரசு அலுவலரிடம் இருந்து பதில் வருவதற்குப் பதில், யார் குறித்து விளக்கம் கேட்டாரோ அவரிடம் இருந்து கொலை மிரட்டல் வந்தது. அதுமட்டுமல்லாமல் அந்த தனியார் வாகன ஓட்டுநர் ரமேஷின் தந்தையையும் மிரட்டியுள்ளார்.
இதில் அதிர்ச்சியடைந்த மாணவர் ரமேஷ், தான் அளித்த மனு மீதான தகவல்களை கசியவிட்ட செயல் அலுவலர் மற்றும் தனியார் வாகன ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார்.
இதையும் படிங்க:ஒரே கல்லூரியைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் மாவட்ட நீதிபதியாகத் தேர்வு!