கோயம்புத்தூர் மாவட்டம் சித்தபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் புனிதா. இவர் தனது மகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தார்.
அந்த மனுவில், "2004ஆம் ஆண்டு சித்தாபுதூர் பகுதியிலுள்ள தங்களது பூர்வீக சொத்தான 3 சென்ட் நிலத்தை, தனது மாமனார் தங்களுக்குத் தெரியாமல் மணல் ஆறுமுகசாமிக்கு விற்பனை செய்துள்ளார். இது குறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததில், எங்கள் தரப்பு வழக்குரைஞர் எங்களை ஏமாற்றி ஆறுமுக சாமிக்குச் சாதகமாகச் செயல்பட்டுள்ளார்.
இது குறித்து மணல் ஆறுமுகசாமியிடம் நேரில் சென்று பார்த்தால் எவ்வித பதிலும் அளிக்கவில்லை. மேற்கொண்டு அடியாள்கள் சிலரை அனுப்பி மிரட்டல் விடுகிறார். காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே எங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதால், எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு மணல் ஆறுமுகம்தான் காரணம். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.