கோவை: தடாகம் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான அங்காளம்மன், மாரியம்மன் கோயில்கள் அமைந்துள்ளன. இங்கு கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் செங்கல் சூளைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக, இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து கடந்த இரு மாதங்களுக்கு முன்னர், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் அதே பகுதியைச் சேர்ந்த ரங்கராஜ், தென்னரசு ஆகியோர், ரூ. 6 கோடி மதிப்புடைய 8.8 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்பது கண்டறியபட்டது.
அறிவிப்பு பலகை நாட்டல்
பின்னர் இது தொடர்பாக நோட்டீஸ் கொடுக்கப்பட்டும், ஆக்கிரமிப்புகள் அகற்றிக் கொள்ளப்படவில்லை. இந்நிலையில் இன்று கோயில் நிலத்தில் செயல்பட்ட செங்கல் சூளைகள், செங்கல் உலர்த்தும் இடங்கள் உள்ளிட்டவை காவல்துறை பாதுகாப்புடன், பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.
தொடர்ந்து இந்த இடம் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமானது என்ற அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு நபர்களிடமிருந்து கோயில் நிலங்கள் மீட்கப்பட்டிருப்பது, அந்த பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: நடிகர் மம்முட்டியின் நிலத்தின் மீது வழக்கு - நில நிர்வாக ஆணையம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு