கோயம்புத்தூர்: வெளிநாடு வாழ் இந்தியரான சஞ்சய்குமார் ரெட்டிக்கு, திருப்பூர் தெற்கு வட்டம் கண்டியன் கோயில் பகுதியில் 2.26 ஏக்கர் பரப்பளவில் நிலம் உள்ளது.
அந்த இடத்தில் பண்ணை வீடு கட்டி வந்த நிலையில் கட்டுமான பணிகளுக்காக முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மருமகன் தினேஷ் என்பவரிடம் ரூ.50 லட்சம் கடன் கேட்டுள்ளார்.
நில மோசடி
அப்போது தினேஷ் அவரது உறவினர்களான தங்கராஜ், ஹரிபாஸ்கர் ஆகியோரது பெயரில் நிலத்தை கிரயம் செய்து கொடுக்க வேண்டும் எனவும், 11 மாதத்திற்குள் பணத்தை திருப்பி கொடுக்கும் பட்சத்தில் பத்திரம் ரத்து செய்யப்படும் எனவும் உறுதியளித்துள்ளனர்.
அதனை சஞ்சய்குமார் ரெட்டி ஒப்புக்கொள்ளவே சொத்தின் வழிகாட்டி மதிப்பு அடிப்படையில் 20 லட்சத்து 39 ஆயிரம் ரூபாயை மட்டும் கொடுத்துவிட்டு நிலத்தை திருப்பூர் தொட்டிப்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கிரயம் செய்துள்ளனர்.
இதனிடையே காங்கயம் பகுதியை சேர்ந்த ஒருவர் அந்த நிலத்தை மூன்றாம் நபருக்கு பேசி விற்பனை செய்ய முயன்றுள்ளார்.
இந்தத் தகவலறிந்த சஞ்சய்குமார் ரெட்டி கடனை திருப்பி செலுத்தி விடுகிறேன் நிலத்தை மீண்டும் என் பெயரில் கிரயம் செய்து கொடுக்க வேண்டும் என தினேஷிடம் கேட்டதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே கிரயப்பத்திரத்தை ரத்து செய்ய கோரி திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
புகார்
இந்நிலையில் தன்னிடமிருந்து ஏமாற்றி அபகரித்த நிலத்தை, வேறு ஒருவருக்கு விற்பனை செய்வதை தடுக்க கோரியும், நிலத்தை மீட்டு தரக்கோரியும், கோயம்புத்தூரிலுள்ள பத்திர பதிவுத்துறை துணை தலைவர் அலுவலகத்தில் சஞ்சய்குமார் ரெட்டி சார்பில், அவரது வழக்கறிஞர் மனு ஒன்றை அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பாதிக்கப்பட்ட சஞ்சய்குமார் ரெட்டியை ஏமாற்றி முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மருமகன், அவரது சகோதரர் ஹரிபாஸ்கர் மாமனார் தங்கராஜ், தங்கராஜின் மகன் பாலசுந்தரம், செந்தில்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவர்களுக்கு உறுதுணையாக இருந்த வெங்கடேஷ் பிரசாத் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கோம். அடுத்த கட்டமாக குற்றவியல் வழக்கு தக்கல் செய்ய உள்ளோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரூ.3 கோடி கொடுத்து மீட்கப்பட்ட தொழிலதிபரின் மகன் - அதிர்ச்சி தகவல்