கோயம்புத்தூர்: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கோவை குனியமுத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஈரோடு கிழக்கு தொகுதியில் 27 ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆனால் தேர்தலையொட்டி நடைபெறும் விஷயங்கள் ஜனநாயகத்துக்குப் புறம்பாக உள்ளது என்றார்.
இந்திய அரசியலில் கேள்விப்படாத அத்துமீறல்கள் இந்த இடைத்தேர்தலில் நடைபெறுகிறது எனத் தெரிவித்தார். ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் வீடுகளுக்கு முன்பாக பந்தல் போட்டு அமர்ந்துள்ளனர், இதனால் பொதுமக்கள் வீடுகளிலிருந்து சுதந்திரமாக வர முடியவில்லை எனத் தெரிவித்தார். மேலும் அங்கு மக்கள் ஆடு மாடு போல அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்றார். பொதுமக்கள் விருப்பப்பட்ட கட்சி கூட்டங்களுக்குச் செல்ல விடாமல் தடுப்பது எந்த விதத்தில் நியாயம் எனவும் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் இந்த தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், முறையான விசாரணை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டு தேவைப்பட்டால் நாங்களும் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்வோம் எனவும் கூறினார். ஆளுங்கட்சியினர் வெற்றி பெற வாய்ப்பு குறைவு எனவும் தெரிவித்தார். இது போன்ற செயல்கள் ஆளுங்கட்சிக்கு எதிராகத்தான் மாறும் எனத் தெரிவித்தார்.
மேலும் மற்ற அரசியல் கட்சியினர் வேறு தொகுதியிலிருந்து தான் மக்களை அழைத்து வந்து பேசுகின்றனர் எனத் தெரிவித்த அவர் அங்குள்ள மக்களிடம் பேச முடியவில்லை என்றார். மத்திய தேர்தல் ஆணையம் தமிழக தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையைக் கவனிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
2009 ஆண்டு 30 ஆயிரத்துக்கு மேற்பட்டோரை கொன்று குவித்த பிறகு இலங்கை அரசு மக்களை அடைத்து வைத்தது போல இப்போது இடைத்தேர்தலில் ஆளும் கட்சியினர் செயல்படுகின்றனர் என குற்றம் சாட்டினார். இடைத்தேர்தல், பொதுத் தேர்தல் என்றால் முறைகேடுகள் நடைபெறுகிறது எனவும் விமர்சித்தார். ஜனநாயகம் இல்லாதது போல உள்ளது என கூறிய அவர் இது பேராபத்துக்கு முன் உதாரணம் என்றார்.
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை ஏற்புடையது அல்ல எனவும் தேர்தல் ஆணையத்தினர் கண்ணைக் கட்டி உள்ளனர் என்றார். ஜனநாயக வாதிகள் நீதிமன்றத்தை நாட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொது மக்களை வீட்டை விட்டு வெளியே வர விடாமல் தடுக்கிறார்கள் என கூறிய அவர் தேர்தலை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் அருந்ததியர் சமூகம் குறித்து சீமானின் விமர்சனம் குறித்த கேள்விக்கு பதில் சொல்ல மறுத்த அவர், எங்கள் தளம் மாறிவிட்டது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: "ரவி சார் நீங்க சங்கி அல்ல அறிவாளி" - காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர்